பட்டினப்பாலை

குழலகவ யாழ்முரல முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்துக்” காவிரிப்பூம் பட்டினத்துக் காவலனான” சோழன் கரிகாற் பெருவளத்தானை பெரும்பாணாற்றுப்படை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய இப் பனுவலுக்குப் பட்டினப்பாலை எனப்பெயர் குறித்தார்.

பட்டினப்பாலை என்பது, பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்தினைச் செய்யுள் நூல் என விரியும்.

புலவரின் நோக்கம் கரிகாற் சோழனை சிறப்பித்துப் பாட வேண்டும் என்பது தான். ஆனால் நேரே பாடினால் அது புறத்திணை ஏழனுள் ஒன்றாகிய வாகைத்திணை வகையில் வரும். அவ்வாகைத்திணைப் பொருள் அமையப் பாடி இப்பாட்டினுள் அகத்திணை ஏழனுள் ஒன்றாகிய பாலைத்திணை பொருள்பட இதனை அகப்பொருட் பாடலாக பாடியதே இந்நூலின் சிறப்பு. பாலை என்பது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் அகத்திணை ஒழுக்கங்களுள் ஒன்று. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பற்றிக் கூறுவது. இப்பட்டினப்பாலை வஞ்சியடிகள் பெருவரவினவாக ஆசிரிய அடிகளும் விரவப்பெற்ற ஓரின்னிசைப் பாடலாகும். இதனை வஞ்சி நெடும்பாட்டெனவும் வழங்குவர். தன் தலைவியைவிட்டு பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது. இது செலவழுங்குதல் துறையின் பாற் வரும்.

வான் பொய்ப்பினும், தான் பொய்யா
மலைத் தலைய கடல் காவிரி,
புனல் பரந்து பொன் கொழிக்கும்

என்று காவிரியின் சிறப்பைப் போற்றி இந்த நூல் தொடங்குகின்றது.

மேலும் மருத நிலத்தின் சிறப்பைக் கூறுங்கால்,

கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின், இணர்ப் பெண்ணை,
முதல் சேம்பின், முளை இஞ்சி

என்கிறது. அதாவது, குலைகளையுடைய தென்னை, வாழை, காயையுடைய கமுகினையும், மணங் கமழும் மஞ்சளையும், பல இனமான மாமரங்களையும், குலைகளையுடைய பனையையும், கிழங்கையுடைய சேம்பையும், முளையையுடைய இஞ்சியையும் உடையன மருத நிலங்கள் என்று மருத நிலத்தின் வளத்தை பட்டினப்பாலையில் தெரிந்து கொள்ள முடியும்.

காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பற்றிக் கூறும்போது,

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்,
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக்…

இதன் பொருள், மகளிர், காய வைத்த உணவை உண்ண வரும் கோழிகள் மீது, தங்கள் காதணிகளை தூக்கி எறிவர், அந்த கனமான காதணி பொன் சிலம்பு அணிந்து நடைவண்டியை தள்ளிக்கொண்டு வரும் சிறுவர்களின் வழியைத் தடுக்கும். இந்த சிறு பகை தவிர்த்து வேறு பெரும் பகை இல்லாத சிறப்புமிக்க காவிரிப்பூம்பட்டினம் என்கிறது.

மேலும் காவிரிப்பூம்பட்டினம் தோட்டங்கள், தோப்புகள், பூஞ்சோலைகள் என செழித்து இருக்கும் ஊர் என சிறப்பித்துக் கூறுகிறது.

அதே போல காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள அட்டில் சாலைகள் (சமையல்) பற்றிக்கூறும்போது,
புலிப் பொறி போர் கதவின்,
திருத்துஞ்சும் திண் காப்பின்,
புகழ் நிலைஇய, மொழி வளர,
அறம் நிலைஇய, அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
என்கிறது. அதாவது புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கதவுகள் கொண்ட பெரிய சமையல் அறைகளில் வடிக்கப்பட்ட சோற்றினுடைய கஞ்சி ஆற்றினைப் போல தெருவில் ஓடுகிறதாம்.

காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் எப்போதும் மறவர்களின் போர் நடந்து கொண்டு இருக்கும் சிறப்பை விளக்க,

மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி,
பெருஞ் சினத்தான் புறங் கொடாது
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை
என்கிறது. அதாவது, அகன்ற இடத்தையுடைய மன்றத்தில் பலரோடு கூடி, கையாலும் ஆயுதங்களாலும் உடலில் படுமாறு தீண்டி, பெருஞ்சினத்தால் ஒருவர்க்கு ஒருவர் புற முதுகு காட்டி ஓடாத பெரிய போர்க்களத்தில், வீசப்படும் கற்களுக்கு அச்சமுற்று, பறவைகள் அங்கிருந்து நீங்கி புள்ளிகளையுடைய பனை மரத்தை அடைகின்றதாம்.

காவிரிப்பூம்பட்டினத்தின் மாடங்கள் மாளிகைகள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றது

Leave a Comment